Wednesday, February 4, 2015

அறியாத கதைகள் 2: என் ஆசிரியரை எப்படி தண்டிப்பேன்?


இந்த கதையை என் ஏழாம் வகுப்பு ஆங்கிலப் பாட புத்தகத்தில் படித்தது. நல்ல கதைகளை எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு படித்திருந்தாலும் கேட்டு இருந்தாலும் மறக்காது. அப்படிப்பட்ட நல்ல கதை ஒன்றைப் பகிர விரும்புகிறேன்.



பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் நாட்டில் மார்ஷல் ஆர்ட்ஸ் (தற்காப்புக் கலை) கற்றுக் கொடுக்கும் பள்ளியில் ஒரு மாணவர் இருந்தார். அவருக்கு இருபத்தைந்து வயதுக்கு மேல் இருக்கும். 

நல்ல மாணவர் தான். இயல்பில் நல்ல குணம் கொண்டவர் தான். இருந்தும் ஒரு நாள் அவர் ஏதோ தவறு செய்துவிட்டார் போல. அவரது குரு அவருக்கு தண்டனை கொடுத்து விட்டார். மறுநாள் கோபத்தில் அந்த மாணவர் தன் குருவைத் தாக்க அவர் ஒரு பாறையின் மீது விழுந்து தலையில் காயப்பட்டு இறந்து போனார்.

அந்த மாணவனை, அந்த குருவின் மகனும், மற்ற சிஷ்யர்களும் துரத்திக்கொண்டு வந்தனர். மாணவன் பயந்து ஓடினான். எப்படியோ அவர்களுக்கு தண்ணி காட்டிவிட்டு ஒரு மலையில் ஒளிந்துகொண்டான்.

அந்த மாணவன், தான் செய்த தவறை உணர்ந்தான். குருவைக் கொன்று எத்தகைய பாவத்தை செய்துவிட்டோம் என்று எண்ணி வருந்தினான். பேசாமல், மீண்டும் தன் பள்ளிக்கே சென்று, அங்கு உள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ளலாமா என்று எண்ணினான். அனால் மீண்டும் அங்கு சென்றால் தனக்கு சங்கு தான் என்பதால் அவரால் எந்த முடிவும் எடுக்க இயலவில்லை.

இருந்தாலும் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்து ஆக வேண்டும் என்று எண்ணினான். அவனால் என்னதான் செய்ய முடியும் என்று நினைத்தான். அப்போது அவனுக்கு ஒரு யோசனை வந்தது.

அவன் ஒளிந்து கொண்டு இருந்த மலை இரண்டு கிராமங்களைப் பிரித்தது. அந்த மலையில் பாதை எதுவும் இல்லை. நல்ல பாதை எதுவும் இல்லாததால், மழைக் காலங்களில் பலர் பாறைகளிலிருந்து வழுக்கி விழுந்து இறந்து போவது சகஜமாக இருந்தது. அதனால், அந்த மலையை சுற்றிக்கொண்டே எல்லோரும் சென்று கொண்டு இருந்தனர்.

அந்த மாணவன், தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக, அந்த மலையைக் கொடைந்து நல்ல பாதை ஒன்றை அமைக்க முடிவு செய்தான். அந்த மலையில் கிடைத்த கிழங்குகளையே உண்டு, அங்கு கிடைத்த பொருட்களை வைத்தே பாதை ஒன்றை உருவாக்கத் தொடங்கினான்.

தனி ஆளாக கிட்டத்தட்ட பாதி வேலையை முடித்து விட்டன். ஒரு நாள் அந்த மாணவன் தன் பணியைத் தொடங்கச் செல்லும்போது அவன் எதிரில் கத்தியுடன் ஒருவன் நின்றான். உற்று பார்த்தபோது தான் தெரிந்தது, அவன் தான் கொன்ற ஆசிரியரின் மகன் என்று. அவன் பழி வாங்க வந்திருப்பதை புரிந்து கொண்டான்.

ஆனால் அவன் பயந்து ஓடவில்லை. தன குருவின் மகனிடம், தான் செய்த செயலுக்குப் பிராயச்சித்தமாக இப்போது இந்த மலையில் பாதையை அமைத்துக் கொண்டு இருக்கிறேன். இந்த பாதையை முடிக்க எப்படியும் ஆறு மாதங்கள் ஆகும். எனவே அதுவரை, காத்திருந்து அதற்குப்பின் தன்னை, பழி தீர்த்துக் கொள்ளலாம் என்று வேண்டிக் கொண்டான்.

குருவின் மகன், மலையைப் பார்த்தன். அந்த மாணவன் சொல்வதில் இருந்த உண்மை அவனுக்குப் புரிந்தது. பாதிக்கும் மேல் வேலை முடிந்து இருப்பதை பார்த்தன். தன் தந்தையைக் கொன்ற மாணவனிடம் சொன்னான், 'சரி. உனக்கு நான் நான்கு மதங்கள் தான் அவகாசம் தருவேன். நான்கு மாதங்கள் முடிந்தவுடன், உன் தலையை சீவிவிடுவேன். அதற்குள், இந்த பாதை அமைக்கும் வேலையை முடித்து விடு. இங்கிருந்து தப்பிக்கும் எண்ணம் கொல்லாதே. இந்த மலையைவிட்டு வெளியே நீ வந்தால், காவல் படையிடம் சிக்கி கொள்வாய்.'

அந்த மாணவன் ஒத்துக் கொண்டான். ஆறு மாத காலம் மட்டுமே தன்னிடம் உள்ளதை புரிந்துகொண்டு, இன்னும் வேகமாக வேலையை செய்யத் தொடங்கினான். 

முதல் மாதம்:

குருவின் மகன் தினமும் வந்து அவன் அங்கே இருக்கிறானா இல்லை தப்பித்து ஓடி விட்டானா என்று பார்த்தான்.

இரண்டாம் மாதம்:

அவன் வேலையை வேகாம முடிக்க, பட்டணத்தில் இருந்து நல்ல உளி, வாங்கிக் கொடுத்தான்.

மூன்றாம் மாதம்:

குருவின் மகன், அந்த மாணவன், அங்கே தினமும் கடின முயற்சி மேற்கொண்டு வருவதைப் பார்த்து, அவனுக்கு நன்கு சமைத்த உணவை தினமும் கொண்டு சென்றான்.

நான்காம் மாதம்:

கிட்டத்தட்ட வேலை முடிந்து விட்டதை அறிந்து கொண்டான், ஆசிரியரின் மகன். ஆனாலும் எஞ்சியுள்ள வேலையை ஒரு மாதத்தில் முடிக்க முடியுமா என்று அவனுக்கு தெரியவில்லை. குருவின் மகன், தானும் உளி முதலிய தேவையான உபகரணங்களை எடுத்துக்கொண்டு மலைக்கு சென்று தன் தந்தையைக் கொன்றவனுக்கு பாதையை அமைக்க உதவி செய்தான்.

நான்கு மாதங்கள் முடியும்போது, பாதை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றது. மாணவன், தான் குருவின் மாணவன் முன் மண்டியிட்டு, 'நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டேன். இனி தாங்கள் விரும்பியது போலவே எனக்கு மரண தண்டனையை அளிக்கலாம்.' என்று பணிவாக சொன்னான்,

குருவின் மகன் தன கையில் இருந்த வாளை ஓங்கிக்கொண்டே அந்த  மாணவனிடம் சொன்னான்.

"உன்னிடம் தான் நான் கடின உழைப்பு என்றால் என்ன என்று கற்றுக் கொண்டேன். நான் உன்னைக் கொள்ள வந்தபோது நீ பயந்து ஓடாமல், என்னிடம் அவகாசம் கேட்டாய். உன்னிடம் தான் உண்மையான வீரத்தை அறிந்து கொண்டேன். செய்யும் தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் பண்பை உன்னிடம் தான் கற்றுக் கொண்டேன். எல்லாவற்றிகும் மேலாக, கொடுத்த வாக்கை, இவ்வளவு கஷ்டப்பட்டு நிறைவேற்றும் பண்பையும் உன்னிடம் தான் கற்றுக்கொண்டேன். நீ எனக்கு குரு ஆகிவிட்டாய். நான் என்ன உன்னைப் போல குருவைக் கொள்பவனா?

என் ஆசிரியரை, எவ்வாறு நான் தண்டிப்பேன்?"

8 comments:

  1. நல்ல கதை நாரதரே!
    நான் படிக்கும்போது இல்லை.
    அல்லது நான் படித்ததில்லை.
    அருமை !
    தொடருங்கள்!

    ReplyDelete
  2. நல்ல கதை. எந்த குற்றமானாலும், ஆத்திரத்தில் இழைத்ததற்கு ஆத்திரமாய் தண்டனை வழங்குவதில் புண்ணியம் இல்லை ! எப்படிப்பட்ட குற்றவாளியும் வருந்தி திருந்தக்கூடிய வாய்ப்பை காலம் கொடுக்கும்.

    எனது புதிய பதிவு : மதமாற்றம் மனமாற்றமாகுமா ?
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post_21.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.


    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சாமானியன்.
      இதோ படிக்கிறேன் உங்கள் பதிவை..

      Delete
  3. இதுவரை படிக்காத கதை
    அருமை நன்றி

    ReplyDelete
  4. குருவின் மகனல்லவா இப்படித்தானே இருக்க வேண்டும் அருமையான கதை.
    நண்பரே நேரமிருப்பின் எமது குடிலுக்கும் வருகை தரவும்
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. இப்பவே வரேன் உங்க வலைபூவுக்கு!

      Delete