Tuesday, December 17, 2013

விருதுக்குக் கிடைத்த வெற்றி.



                   உலக அளவில் செலிப்ரிடியாக உள்ள இந்தியர்களின் பட்டியலில் நிச்சயம் ரஹ்மானுக்கு பிரதான இடமுண்டு. முகநூலில் அதிக லைக்குகளைப் பெற்ற இந்தியர் இவர்தான். அடுத்துதான் சச்சின் சூப்பர் ஸ்டார், அரசியல்வாதிகள் எல்லாம்.

            இத்தனை புகழுக்கும் காரணம் அவர் அமைத்த இசை என்று சொல்லுவதைவிட வாங்கிய விருதுகள் என்றே சொல்லிடலாம். ரஹ்மான் வீட்டுக்கு வருபவர் எல்லாம் அவர் வாங்கிய ஆஸ்கார் விருதுகளுடன் புகைப்படம் எடுதுக்கொலாமல் போக்மாட்டர்கலாம். ரஹ்மானின் தாயார் அந்த இரண்டு ஆஸ்கார் விருதுகளையும், நவராத்திரி முடிந்ததும் கொலு பொம்மைகளை எடுத்து வைப்பதுபோல் எங்கோ மறைத்து வைத்து விட்டாராம்.

                         இன்றைய நிலையில் ரஹ்மான் என்ன இசை அமைத்தாலும் அது 'செமையா இருக்கு' என்று முகநூலில் அந்த பாடலை பகிர்ந்து விடுகின்றனர் அவரது ரசிகர்கள். அது ஒருவிதத்தில் நல்லது என்றே சொல்லலாம். நாம் என்ன இசை அமைத்தாலும் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் பல வித்யாசமான பாடல்களை இசை அமைக்கிறார். நெஞ்சுக்குள்ள, மூங்கில் தோட்டம், உசுரே போகுதே, இரும்பிலே ஒரு இதயம்,  காட்டு சிறுக்கி, எங்க போன ராசா, நேற்று அவள் இருந்தாள் போன்ற பாடல்களுக்கு ரஹ்மான் தவிர வேறு யார் இசை அமைத்திருந்தாலும் மக்கள் அதை புறக்கணித்து இருப்பர்.

                 ரஹ்மானின் மிகப்பெரும் விசிறி நான். அதனால் தான் மற்றவர்கள் அவரது இசைக்கு ரசிகர்களாக இருக்க வேண்டும் விருதுகளுக்கு அல்ல என்று  எண்ணுகிறேன்.

                      நம் மக்கள் எப்போதும் விருது பெறுபவர்களைத் தான் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.. எம்.எஸ்.வி, இசைஞானி இளையராஜா போன்றோருக்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தான் பத்ம விருதுகள் கிடைத்தது. ஆனால் அவர்களின் இசையை மக்கள் இன்னும் நேசிக்கின்றனர்.

                         ராஜாவும் நான்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். ரஹ்மானும் நான்கு தேசிய விருதுகளைப் பெற்று உள்ளார். இவர்கள்தான் அதிக தேசிய விருதுகளைப்பெற்ற இசை அமைப்பாளர்கள்.. ஆனால் குறுகிய காலத்தில் ரஹ்மான் இந்த விருதுகளைப் பெற்று இருக்கிறார்.. அவர் இசை அமைத்த முதல் படத்திற்கே தேசிய விருது கிடைத்தது.. இந்த சாதனையை செய்த இசை அமைப்பாளர்கள் இருவர்தான்.. ஒருவர் நம் ரஹ்மான். இன்னொருவர் இஸ்மாயில் தர்பார் என்பவர்.

            இஸ்மாயில் தர்பாரை ஒரு இசையமைப்பாளராக உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ நான் அறியேன். ஆனால் ஒரு சம்பவத்தை சொன்னால் நீங்கள் அவரை நினைவில் கொள்வீர்கள். இஸ்மாயில் தான், ரஹ்மான் ஆஸ்கர் விருதுகளை விலை கொடுத்து வாங்கி விட்டார் என்று வயிற்று எரிச்ச்சலை கக்கியவர். ஸ்லம்டாக் மில்லியனைர்க்கு அவர் அமைத்த இசை அவ்வளவு சிறப்பானது இல்லை.. விருது பெற ரஹ்மானுக்கு தகுதி இல்லை.. ரோஜா, பாம்பே போன்ற படங்களுக்கு கிடைத்திருந்தால் அவர் மகிழ்ந்திருப்பராம்.. ஸ்லம்டாக் மில்லியனைர்க்கு ஆஸ்கர் கொடுத்து இருக்கத்தேவை இல்லை என்று திருவாய் மலர்ந்து ரஹ்மான் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.

                       ரசிகர்கள் மட்டுமல்ல, கலைஞர்களும் விருதுகளின் மீது எவ்வளவு பற்று கொண்டுள்ளார்கள்!!

                   ஆனால் சிறந்த கலைஞர்களுக்கு விருது என்றுமே ஒரு பொருட்டாக இருந்ததில்லை.. எம்.எஸ்.விக்கு முனைவர் பட்டம் கொடுக்கவில்லை என்று வருத்தப்படுவார்கள் உள்ளனர். பீம்சேன் ஜோஷிக்கு பாரத ரத்னா கொடுத்தவர்கள் பாலமுரளிக்கு கொடுக்கவில்லை என்று வருத்தப்படுபவர்களும் உள்ளனர். ராஜா ஆஸ்கர் வாங்கவில்லையே என்று வருந்துபவர்களும் இருக்கிறர்கள்.. ஆனால் இவர்கள் விருதை ஒரு பொருட்டாகக் கருதியதில்லை.



                  தேசிய விருதும் ஆஸ்கர் விருதும் கிராம்மி விருதும் பெற்றுதான் அவர்கள் சிறந்த இசை கலைஞர்கள் என்று நிரூபிக்கத் தேவை இல்லை. நல்ல இசைக்கு விருது எதுவும் தேவை இல்லை. விருது பெறுவது எல்லாம் நல்ல இசை என்றும் இல்லை. நல்ல இசையைக் கேட்ட மாத்திரத்தில் உணர்ந்து விடலாம்.

No comments:

Post a Comment