Friday, December 27, 2013

2013 - சினிமா பாடல்களில் கர்நாடக ராகங்கள்



இந்திய சினிமாவில் கர்நாடக இசைக்கு ஒரு பெரும் இடம்  உள்ளதை மறுக்க முடியாது. நாம் மேற்கத்திய பாணியில் அமைந்துள்ளது என்று எண்ணிக்கொண்டிருக்கும் பாடல்களில் பல கர்நாடக சங்கீத ராகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. இன்றும்கூட பல பாப்\டல்கள் ராகங்களின் அடிப்படியில் இசையமைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு (2013) முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டில் ராகங்களின் அடிப்படையில் இசையமைக்கபட்ட பாடல்களின் பட்டியலை தயார் செய்து இருக்கிறேன். 

சிவரஞ்சனி ( sivaranjani ):


இந்த ஆண்டில் மூன்று பாடல்கள் சிவரஞ்சனியில் இசையமைக்கப்பட்டுள்ளது.

1.  Amma Wake Me Up - வத்திகுச்சி படம்.

    கிப்ரான் இசையமைத்த இரண்டாவது படம் இது. ஏற்கனவே முதல் படத்தில்  (வாகை சூடவா) ஸரசாங்கி ராகத்தில் போறாளே போறாளே என்று ஒரு பாடலைக் கொடுத்தவர். இந்த படத்தில் அம்மா வேக் மீ அப் என்னும் பாடலை சிவரஞ்சனியில் இசை அமைத்து இருக்கிறார். இந்த பாடலுக்கு "கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' பாடல் தான் இன்ச்பிரேஷன் என்று நிச்சயமாக சொல்லலாம். ரஹ்மான் இசையமைத்த அந்த பாடலும் சிவரஞ்சனி தான். அத்தோடு அந்த பாடலில் உள்ளது போன்றே 'கிளாக்' சத்தத்தையும் பயன்படுத்தி இருக்கிறார் கிப்ரான். 


 


2. பல்லு போன ராசா - கல்யாண  சமையல் சாதம்

அரோரா என்னும் புதுமுக இசையமைப்பாளர் கம்போஸ்  செய்த பாடல். கிண்டல் செய்வது போல அமைந்த இப்பாடலுக்கு சிவரஞ்சனி நல்ல சாய்ஸ். முதல் படத்திலே இவர் கொடுத்த எல்லா பாடல்களும் கிளாஸ் ரகம்.




3. எங்க போறே மகனே - மதயானைக்  கூட்டம் 

புதுமுக இசையமைப்பாளர் ரகுநாதன் இசை அமைத்த பாடல். படத்தை தயாரித்தவர் ஜி .வி. பிரகாஷ். இதுவும் சிவரஞ்சனி தான். மேலே உள்ள இரண்டு பாடல்களும் ஒரே மாதிரியான feel  தரும். இந்த பாடல் அந்த இரண்டு பாடல்களைவிட வவித்யாசமானது.


பஹுதாரி ( Bahudhari )


ஆஹா காதல் - மூன்று பேர் மூன்று காதல் 

யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்த இப்பாடல் ஹிட் என்று சொல்லிவிட முடியாது.  ஆனால் நிச்சயம் இது ஒரு அருமையான மெலடி... 

 

த்விஜாவந்தி ( Dwijavanthi )


உன்னை காணாது நான் - விஸ்வரூபம் 

இந்த பாடலை பிடிக்கவில்லை என்று  மாட்டார்கள்.  சிலர் இந்த பாடலை காபி ராகம் என்று சொல்லுவார்கள். ( கமலஹாசனும் ஒருமுறை இப்பாடலை 'ரகுபதி ராகவ ராஜா  ராம்' பாடலின் ராகத்தில் இசையமைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டதாக சொன்னார். ரகுபதி ராகவ பாடல் காபி ராகம் ஆச்சே)  அனால் நான் அறிந்த வரையில் இது த்விஜாவந்தி தான். தமிழில் இந்த ராகத்தை ரஹ்மானும் வித்யாசாகரும் தான் இதுவரை பயன்படுத்தி இருக்கின்றனர். இவர்களுக்குப் பின் ஷங்கர் - ஈஷான் - லாய் இப்படத்தில் பயன்படுத்தி உள்ளனர். 

 

அமிர்தவர்ஷிணி ( Amritavarshini )

மெல்ல சிரித்தாள் - கல்யாண  சமையல் சாதம்

இந்த ராகத்தை இசைத்தல் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உண்டு. சினிமாவில் இந்த ராகம் அதிகம் பயன்படுத்தப்பட்டதில்லை. ராகவேந்திரா படத்தில் மழைக்கொரு தேவனே என்ற பாடலும் அக்னி நட்சத்திரம் படத்தில் தூங்காத விழிகள் ரெண்டு பாடலும் தான் எனக்கு தெரிந்து அம்ரிதவர்ஷினியில் உள்ள பாடல்கள். அதற்குப்பிறகு ஆரோரா இசையமைத்த கல்யாண  சமையல் சாதம் படத்தில் உள்ள மெல்ல சிரித்தாள்  பாடலின் பல்லவி அமிர்தவர்ஷினியில் அமைந்து உள்ளது. இந்த பாடலில் 'தூங்காத விழிகள் ரெண்டு' பாடலின்  சாயல்கள் லேசாக  தெரியும். இப்பாடலின் சரணம் மேஜர் ஸ்கேலில் (சங்கராபரணம் ராகம்) அமைந்து உள்ளது. 


முகாரி ( Mukhari )


கண்ணுக்குள் பொத்திவைப்பேன் - திருமணம் என்னும் நிக்காஹ் 

சோகத்தை சொல்லும் முகாரி ராகத்தைக்  கொண்டு ஜாலியான பாடல்களைத் தர ஜிப்ரான் போன்ற சிலரால் மட்டும் தான் முடியும் . இப்பாடலின் பல்லவி முகாரி ராகத்தில் இசை அமைக்கப்பட்டுள்ளது. முதலில் இப்பாடல் பைரவி ராகம்  என்று நினைத்துவிட்டேன். பிறகு இப்பாடலைப் பாடிய சாருலதா மணி தான் இது முகாரி என்று தெளிவு படுத்தினார். 


ஹமீர்-கல்யாணி ( Hamir Kalyani )


கண்ணுக்குள் பொத்திவைப்பேன் - திருமணம் என்னும் நிக்காஹ் 

இப்பாடலின் பல்லவி முகாரி ராகத்தில் உள்ளது. சரணம் ஹமிர் கல்யாணியில் அமைந்து உள்ளது. மிகவும் அழகான ராகம். 

மிஸ்ர கரா ( Mishra gara )


கண்ண கண்ண உருட்டி - வத்திகுச்சி 

இப்பாடல் மிஸ்ரா கரா ராகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அவ்வளவு பிரபலாமான ராகம் இல்லை என்றாலும் இந்த பாடல் ஓரளவுக்கு பேசப்பட்டது.

சலநாட்டை  ( Chalanattai )


ஜிங்குனமணி - ஜில்லா 

இமான் இதுபோன்ற ஒரு வித்யாசமான பாடலைத் தருவார் என்று நினைத்துகூட பார்க்கவில்லை. சலநாட்டையே ஒரு வித்யாசமான ராகம். இந்த ராகத்தில் அமைந்த பாடல்கள் எல்லாமே நான் அறிந்தவரையில் ஹிட். 

கல்யாணி ( Kalyani )


Aao Balma - ஏ.ஆர்.ரஹ்மான் 

எம்.டி.வி.யில் கோக்  ஸ்டுடியோ நடத்திய நிகழ்ச்சியில் பல புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் இனைந்து ரஹ்மான் ஆக்கிய பாடல் தான் ஆவோ பல்மா. கர்நாடக இசையை கிட்டார் பியானோ போன்ற மேற்கத்திய இசைக் கருவிகளைக் கொண்டு கொடுத்த ஒரு அருமையான இசைக் கோவை தான் ஆவோ பல்மா.

மற்ற பாடல்கள் 

நான் அறிந்து வேறு எந்த  பாடலும் கல்யாணில் இல்லை. 

குட்டிபுலி யில் காத்து காது வீசுது பாடலில் கொஞ்சம் கல்யாணி சாயல் உள்ளது. ஹம்சத்வனி சாயல் கூட. 

திருமணம் என்னும் நிக்கஹ்வில் உள்ள சில்லென்ற சில்லென்ற பாடலிலும் ஒரு சில இடங்களில் கல்யாணி சாயல் உள்ளது.

நய்யாண்டி படத்தில் முன்னாடி போற புள்ள பாட்டின் சரணத்தின் முதல் இரண்டு வரிகள் கல்யாணி ராகம்.

மேற்கூறிய மூன்று பாடல்களை இசை அமைத்தவரும் ஜிப்ரான் தான். 

.
இப்பதிவை இத்தோடு நான் முடித்துக் கொள்கிறேன். இப்பதிவில்  ஏதேனும் ராகத்தை நான் தப்பாகவோ மாற்றியோ எழுதி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். வேறு ஏதேனும் பாடல்கள் ராகத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டு இருந்தாலும் தெரிவிக்கவும். 

நன்றி.

Thursday, December 19, 2013

ராகசுரபி - எளிய வழியில் கர்நாடக சங்கீதம் - 1




கர்நாடக இசை மீது ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் பயன்படுத்தவேண்டிய இணையத்தளம் ராகசுரபி (http://ragasurabhi.com/index.html). கர்நாடக  இசையைப்பற்றி எதுவும் அறியதவர்களைக்கூட இந்த தளம் நல்ல இசை ஞானம் உள்ளவரை மாற்றிவிடும். 

ராகசுரபியில் என்ன இருக்கு???

கிட்டத்தட்ட நூறு ராகங்களின் ஆரோகண அவரோகணங்கள் அகர வரிசையில் இடம் பெற்று உள்ளன. தேர்ந்த இசைக் கலைஞர்களால்  பாடப்பட்ட ஆரோகண அவரோகண ஆடியோ க்ளிப்கள் இடம் பெற்று இருக்கிறது..

 ஆரோகண அவரோகணங்கள் மட்டுமல்லாமல் அத்துடன் ராகத்தின் 'சிக்நேச்சரையும்' (signature) இணைத்துள்ளனர். சிக்னேச்சரைக் கேட்டாலே அந்த ராகத்தின் feelஐ உணர்ந்து விடலாம். சிக்நேச்செரில், அந்த ராகத்தில் பொதுவாக பாடப்படும் சங்கதிகள் இருக்கும்.

அத்தோடு, அந்தந்த ராகத்தில் அமைந்த ஒரு கர்நாடக சங்கீதப் பாடல் ஒன்றையும் பிரபலமான சினிமாப்பாடல் ஒன்றையும் பாடி இணைத்து உள்ளனர். 

மேலே குறிப்பிட்டவற்றை அறிந்தாலே, நமக்கு  அந்தந்த ராகத்தைப் பற்றி ஓரளவுக்குப் புரிந்து விடும். மற்றபடி ராகத்தை மாஸ்டர் செய்ய நிறைய பாடல்களைப் கேட்கவும் பாடவும் வேண்டும். 

ராகசுரபியின் இன்னொரு சிறப்பு, ராகங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது.. 'raga comparison' என்னும் சுட்டியின்கீழ் இடம்பெற்று இருக்கிறது. கர்நாடக இசையைக் கற்றுக்கொள்பவர்களுக்குக்கூட ஒரு சில ராகங்கள் ஒரே மாதிரி இருப்பது போலத் தோன்றும். உதாரணத்துக்கு, காபிராகம், தேஷ் ராகம் போன்ற ராகங்கள் கேட்க ஒரே மாதிரி இருக்கும். இது போன்ற சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள ராகசுரபியின் raga comparison பேருதவி செய்கிறது.. 

உங்கள் கர்நாடக சங்கீத ஞானத்தை சோதித்து பார்க்க ஆசையா? Ragasurabhi Quizஇல் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். வாராவாரம் quiz நடத்தப்படுகிறது. மூன்று இசைத்துணுக்குகள் பதிவேற்றப்பட்டிருக்கும். நீங்கள் அவை எந்த ராகம் என்று கண்டுபிடித்து ராகசுரபிக்கு மின்னஞ்சல் அனுப்பி விடுங்கள். ஒரு வாரத்தில் விடைகளையும் விடையளித்தவர்களின் பெயர்களையும் அறிவிப்பார்கள். Ragasurabhi quizஉடன் ஸ்வரஸ்தானங்களின் இசைத் துணுக்கும் பதிவேற்றப்படிருக்கும். ஸ்வரஸ்தான்களைக் கண்டறிய அவை நிச்சயம் உதவும். 



அடுத்த பதிவில் ராகசுரபியில் உள்ள மற்ற வசதிகளைப்பற்றிக் கூறுகிறேன்.

Tuesday, December 17, 2013

விருதுக்குக் கிடைத்த வெற்றி.



                   உலக அளவில் செலிப்ரிடியாக உள்ள இந்தியர்களின் பட்டியலில் நிச்சயம் ரஹ்மானுக்கு பிரதான இடமுண்டு. முகநூலில் அதிக லைக்குகளைப் பெற்ற இந்தியர் இவர்தான். அடுத்துதான் சச்சின் சூப்பர் ஸ்டார், அரசியல்வாதிகள் எல்லாம்.

            இத்தனை புகழுக்கும் காரணம் அவர் அமைத்த இசை என்று சொல்லுவதைவிட வாங்கிய விருதுகள் என்றே சொல்லிடலாம். ரஹ்மான் வீட்டுக்கு வருபவர் எல்லாம் அவர் வாங்கிய ஆஸ்கார் விருதுகளுடன் புகைப்படம் எடுதுக்கொலாமல் போக்மாட்டர்கலாம். ரஹ்மானின் தாயார் அந்த இரண்டு ஆஸ்கார் விருதுகளையும், நவராத்திரி முடிந்ததும் கொலு பொம்மைகளை எடுத்து வைப்பதுபோல் எங்கோ மறைத்து வைத்து விட்டாராம்.

                         இன்றைய நிலையில் ரஹ்மான் என்ன இசை அமைத்தாலும் அது 'செமையா இருக்கு' என்று முகநூலில் அந்த பாடலை பகிர்ந்து விடுகின்றனர் அவரது ரசிகர்கள். அது ஒருவிதத்தில் நல்லது என்றே சொல்லலாம். நாம் என்ன இசை அமைத்தாலும் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் பல வித்யாசமான பாடல்களை இசை அமைக்கிறார். நெஞ்சுக்குள்ள, மூங்கில் தோட்டம், உசுரே போகுதே, இரும்பிலே ஒரு இதயம்,  காட்டு சிறுக்கி, எங்க போன ராசா, நேற்று அவள் இருந்தாள் போன்ற பாடல்களுக்கு ரஹ்மான் தவிர வேறு யார் இசை அமைத்திருந்தாலும் மக்கள் அதை புறக்கணித்து இருப்பர்.

                 ரஹ்மானின் மிகப்பெரும் விசிறி நான். அதனால் தான் மற்றவர்கள் அவரது இசைக்கு ரசிகர்களாக இருக்க வேண்டும் விருதுகளுக்கு அல்ல என்று  எண்ணுகிறேன்.

                      நம் மக்கள் எப்போதும் விருது பெறுபவர்களைத் தான் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.. எம்.எஸ்.வி, இசைஞானி இளையராஜா போன்றோருக்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தான் பத்ம விருதுகள் கிடைத்தது. ஆனால் அவர்களின் இசையை மக்கள் இன்னும் நேசிக்கின்றனர்.

                         ராஜாவும் நான்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். ரஹ்மானும் நான்கு தேசிய விருதுகளைப் பெற்று உள்ளார். இவர்கள்தான் அதிக தேசிய விருதுகளைப்பெற்ற இசை அமைப்பாளர்கள்.. ஆனால் குறுகிய காலத்தில் ரஹ்மான் இந்த விருதுகளைப் பெற்று இருக்கிறார்.. அவர் இசை அமைத்த முதல் படத்திற்கே தேசிய விருது கிடைத்தது.. இந்த சாதனையை செய்த இசை அமைப்பாளர்கள் இருவர்தான்.. ஒருவர் நம் ரஹ்மான். இன்னொருவர் இஸ்மாயில் தர்பார் என்பவர்.

            இஸ்மாயில் தர்பாரை ஒரு இசையமைப்பாளராக உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ நான் அறியேன். ஆனால் ஒரு சம்பவத்தை சொன்னால் நீங்கள் அவரை நினைவில் கொள்வீர்கள். இஸ்மாயில் தான், ரஹ்மான் ஆஸ்கர் விருதுகளை விலை கொடுத்து வாங்கி விட்டார் என்று வயிற்று எரிச்ச்சலை கக்கியவர். ஸ்லம்டாக் மில்லியனைர்க்கு அவர் அமைத்த இசை அவ்வளவு சிறப்பானது இல்லை.. விருது பெற ரஹ்மானுக்கு தகுதி இல்லை.. ரோஜா, பாம்பே போன்ற படங்களுக்கு கிடைத்திருந்தால் அவர் மகிழ்ந்திருப்பராம்.. ஸ்லம்டாக் மில்லியனைர்க்கு ஆஸ்கர் கொடுத்து இருக்கத்தேவை இல்லை என்று திருவாய் மலர்ந்து ரஹ்மான் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.

                       ரசிகர்கள் மட்டுமல்ல, கலைஞர்களும் விருதுகளின் மீது எவ்வளவு பற்று கொண்டுள்ளார்கள்!!

                   ஆனால் சிறந்த கலைஞர்களுக்கு விருது என்றுமே ஒரு பொருட்டாக இருந்ததில்லை.. எம்.எஸ்.விக்கு முனைவர் பட்டம் கொடுக்கவில்லை என்று வருத்தப்படுவார்கள் உள்ளனர். பீம்சேன் ஜோஷிக்கு பாரத ரத்னா கொடுத்தவர்கள் பாலமுரளிக்கு கொடுக்கவில்லை என்று வருத்தப்படுபவர்களும் உள்ளனர். ராஜா ஆஸ்கர் வாங்கவில்லையே என்று வருந்துபவர்களும் இருக்கிறர்கள்.. ஆனால் இவர்கள் விருதை ஒரு பொருட்டாகக் கருதியதில்லை.



                  தேசிய விருதும் ஆஸ்கர் விருதும் கிராம்மி விருதும் பெற்றுதான் அவர்கள் சிறந்த இசை கலைஞர்கள் என்று நிரூபிக்கத் தேவை இல்லை. நல்ல இசைக்கு விருது எதுவும் தேவை இல்லை. விருது பெறுவது எல்லாம் நல்ல இசை என்றும் இல்லை. நல்ல இசையைக் கேட்ட மாத்திரத்தில் உணர்ந்து விடலாம்.

Friday, December 13, 2013

வாழ்த்து




முதல் பதிவை இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கலாமே என்று எனக்கு பிடித்த (தெரிந்த) இரண்டு இறைவாழ்த்து பாடல்களுடன்  தொடங்குகிறேன்.

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை தூய
உருப்பளிங்கு போல்வார் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பன் இங்கு வராது இடர்
படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரை போற்கையும் துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி. 


கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதியில் உள்ள பாடல் இது. டூயட் (Duet) படத்தில் உள்ள ஆனந்த பைரவி ராகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த  'மெட்டுப் போடு' பாட்டு இந்த வரிகளுடன்தான் தொடங்கும். 

தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர
மொழிந்திடுதல்; சிந்திப்பார்க்கே
களி வளர உள்ளத்தில் ஆநந்தக்
கனவு பல காட்டல்; கண்ணீர்த்
துளிவர உள் உருக்குதல் இங்கு இவையெல்லாம்
நீ அருளும் தொழில்கள் அன்றோ?
ஒளிவளருந் தமிழ்வாணி! அடியனேற்கு
இவை அனைத்தும் உதவுவாயே.

இது மகாகவி, பாஞ்சாலி சபதத்தில் உள்ள சூதாட்ட சருக்கத்தில், 'வாணியை வேண்டுதல்' என்னும் தலைப்பின் கீழ் இந்த பாடல் அறுசீர் விருத்தத்தில் இயற்றப்பட்டு உள்ளது.. அவர் இயற்றிய கடவுள் வாழ்த்துப் பாக்களில் இதுதான் பெஸ்ட் என்று எனக்கு தோன்றியது. 

தொடர்ந்து பதிவுகளை எழுத எண்ணம் கொண்டுள்ளேன். எனக்கு அரைகுறையாக தெரிந்த எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து பல பதிவுகளை எழுதி அதிகப்ரசங்கித்தனம் செய்ய காத்திருக்கிறேன்.